துணைவேந்தர், பதிவாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்.,களை நியமிக்க கோரிக்கை
துணைவேந்தர், பதிவாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்.,களை நியமிக்க கோரிக்கை
UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 09:13 AM
ஓமலுார்:
பல்கலை சட்டம் மற்றும் சாசன விதிகள்படி, பல்கலையை நிர்வகிக்க, துணைவேந்தர், பதிவாளர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், பொதுச்செயலர் பிரேம்குமார் ஆகியோர், முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சேலம் பெரியார் பல்கலையில் வெளி வந்துள்ள ஊழல், முறைகேடு, விதிமீறல் புகார்கள் கவலை அளிப்பதாக உள்ளது.முன்மாதிரி கல்வியாளர்களாக கருதப்படும், பல்கலையின் தலைமை பொறுப்பில் உள்ள துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொறுப்பு) ஆகியோருக்கு எதிராக, போலி ஆவணங்கள், போலி கம்பெனிகள் உருவாக்கம், மோசடி, கூட்டுச்சதி, சாதிய இழிவு, பட்டியலின மாணவர்களின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார்கள், உயர்கல்வியின் மாண்பை குலைக்கும் வண்ணம் உள்ளது.துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் பேராசிரியர் தங்கவேல் மீது, சேலம் மாநகரம், கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருக்கிறது. பதிவாளர் தங்கவேல் தலைமறைவாக உள்ளார்.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டின் அடுத்த பருவம் இன்று துவங்க உள்ளது. பல்கலையில் 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 27 துறைகள், 150 ஆசிரியர்கள், 700 பணியாளர்கள், 125 இணைவு பெற்ற கல்லுாரிகள் உள்ளடக்கிய நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது. பதிவாளர் தலைமறைவாக உள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.எனவே பல்கலை சட்டம் மற்றும் சாசன விதிகள்படி, பல்கலையை நிர்வகிக்க மாற்று ஏற்பாட்டை அரசு செய்திட வேண்டும். பல்கலை சட்டம் மற்றும் சாசன விதிகளின்படி, துணைவேந்தர் பணியாற்ற முடியாத அசாதாரண சூழ்நிலை உருவானாலோ, அவர் உடல் நலமின்றி இருந்தாலோ, பல்கலை கழக ஆட்சிக்குழு கூடி, மூத்த பேராசிரியரையோ அல்லது நிர்வாக குழுவையோ அமைக்க வேண்டும்.எனவே தமிழ்நாடு அரசு, துணைவேந்தர் நிர்வாகக்குழுவை அமைத்திட உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலை நிர்வாகத்தை சீர் செய்திட, தமிழ்நாடு அரசு, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் - ஐ.ஏ.எஸ்., ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஊழல் முறைகேடு விதி மீறலில் சிக்கி தவிக்கும் பெரியார் பல்கலையை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.