UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 10:25 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே நெல்லியாளம் குன்றில் கடவு பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில், 29 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சத்துணவு கூடம் சேதமான நிலையில், கடந்த, 2021 ஆம் ஆண்டு அரசு அறிவுரையின்படி அகற்றப்பட்டது.அதனை தொடர்ந்து, சமையல் கூடம் கட்டித்தராத நிலையில், வகுப்பறை மற்றும் திறந்தவெளியில் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கி வந்தனர். இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சமையல் கூடம் கட்டி தர வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டது.தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த டிச., 14ஆம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து சமையல் கூடம் கட்டுவதற்காக, 4.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை அடுத்து சமையல் கூடம் கட்டுவதற்கான பணி துவக்கி வைக்கப்பட்டது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.