UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 09:34 AM
கொச்சி:
கேரளாவின் கொச்சி பல்கலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், பல்கலை முன்னாள் முதல்வர் மற்றும் இரு பேராசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொச்சி அருகே களமசேரியில், கொச்சி அறிவியல், தொழில்நுட்ப பல்கலை இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த பல்கலையின் திறந்தவெளி அரங்கில், ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.திரைப்பட பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்க இருந்தார். 1,500 பேர் கொள்ளளவு உடைய அரங்கில் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி, கொச்சி பல்கலையைச் சேர்ந்த அதுல் தம்பி, அன்ருப்தா, சாரா தாமஸ் ஆகிய மூன்று மாணவர்களும், பாலகாடைச் சேர்ந்த ஆல்வின் என்ற இளைஞரும் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர்.விபத்து தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தற்போது விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பல்கலையின் முன்னாள் முதல்வர் மற்றும் இரு பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து, மூன்று பேர் மீதும் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.