பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 09:43 AM
சென்னை:
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு என சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மழை போல் முதலீடுமாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் நான் கோட், சூட் அணிவது வழக்கம். அனைத்து வெளிநாட்டினரும் இங்கு வந்துள்ளதால், கோட், சூட் அணிந்தது எனக்கு பொருத்தமானதாக உள்ளது. இன்று சென்னையில் மழை பெய்தது. அதேபோல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். முதல்வராக மட்டுமின்று சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.பியூஷ் கோயலுக்கு நன்றி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழில் பழமொழி உள்ளது. பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள். திருவள்ளுவர், கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். மாநாட்டிற்கு வந்து பெருமை சேர்த்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.அதிவிரைவுப்பாதையில்..
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தனித்த தொழில்வளம் கொண்டது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் ஆகவும் தமிழகம் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழகம் பயணித்து வருகிறது. முதலீட்டாளர் மாநாடு மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2030க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குவியும் முதலீடு
ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் ஏராளமான முதலீடுகள் தமிழகத்தில் குவிகிறது. முதலீட்டாளர்களின் விருப்பத்தை முன்கூட்டியே கணித்து தமிழக அரசு செயல்படுகிறது. திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கியதுடன், நாளைய தொழில் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ற தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்களின் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதிலும் உறுதியாக உள்ளது. 2.5 ஆண்டு கால ஆட்சியில் பெருமளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட புரிந்தணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.தனிக்கொள்கை
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜவுளி மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பின்தங்கிய மாவட்டங்களில் வேலைவாயப்பு உருவாக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதனால், அந்த மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.தொழில் துவங்க சிறந்த சூழல்
தமிழகத்தில் ஏற்கனவே தொழில்திட்டங்களை அமைத்து நிறுவனங்கள், தங்களது திட்டங்களை விரிவுபடுத்தியது, தொழில் துவங்க சிறந்த சூழல் நிலவுவதற்கு சான்று. தமிழகத்தை சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். எல்லா துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை மாநிலம் கொண்டு உள்ளது. மாநாடு நடக்கும் 2 நாட்களில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் செய்வோம்.வாருங்கள். முதலீடு செய்யுங்கள். தமிழகத்தின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்கெடுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.முதன்மை மாநிலம்
முன்னதாக இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம். ஆட்டோமொபைல், மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக மட்டும் அல்லாமல், இந்திய தொழில்துறை வளர்ச்சியிலும் முன்னிலையில் உள்ளது. உற்பத்தியில் முதன்மை மாநிலமான தமிழகத்தில் 45 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இந்திய அளவில் 70 சதவீத நான்கு சக்கர வாகனங்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.