வாழ்க்கையில் முன்னேற... படிப்பு முக்கியம்! போலீஸ் கமிஷனர் பேச்சு!
வாழ்க்கையில் முன்னேற... படிப்பு முக்கியம்! போலீஸ் கமிஷனர் பேச்சு!
UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 10:17 AM
கோவை:
கல்வி கற்றால் அனைத்து செல்வங்களும் கிடைத்து விடும். பெரிய அறிஞர்கள் கூட கல்வி கற்காததை நினைத்து, வேதனை அடைந்து உள்ளனர் என, மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார்.
கோவை நகரில் இளம் குற்றவாளிகளை தடுக்கும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க, ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் மூலம், சில மாதங்களுக்கு முன், 173 இடைநின்ற பள்ளி குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும், 48 இடைநின்ற பள்ளி குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை மூலமாக இடை நின்ற மாணவர்களை கண்டறிந்த போலீசார், அவர்களின் வீட்டுக்கே சென்று மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து பேசினர். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினர். மீண்டும் பள்ளியில் சேர ஏற்பாடு செய்தனர்.
இவ்வாறு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி, உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில், நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், மனிதர்கள் தற்போது பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் கல்வி. பசுமை புரட்சி வந்ததும் கல்வியால்தான். அதனால் பசி, பட்டினியில் இருந்து தப்பித்தோம்.
கல்வி கற்றால் அனைத்து செல்வங்களும் கிடைத்து விடும். பெரிய அறிஞர்கள் கூட கல்வி கற்காததை நினைத்து, வேதனை அடைந்து உள்ளனர். கல்வி கற்பதன் வாயிலாக, பெரிய லட்சியத்தை அடைந்து விடலாம். வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, போலீசார் சார்பில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.