பொதுத் தேர்வுப் பணிகள் ஒதுக்கீட்டில் மதுரை கல்வி அலுவலர்கள் புலம்பல்
பொதுத் தேர்வுப் பணிகள் ஒதுக்கீட்டில் மதுரை கல்வி அலுவலர்கள் புலம்பல்
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:40 AM
மார்ச் 1 முதல் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு மையங்களில் அரசு உதவிபெறும்பள்ளிகளை சேர்ந்த இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோருக்கு சி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்கள் சார்பில் பணிகள் ஒதுக்கப்படும்.கல்வித்துறை வழிகாட்டுதல்படி 6 கி.மீ.,க்குள் உள்ள தேர்வு மையங்களில் ஒதுக்க வேண்டும். ஆனால் மதுரையில் 40 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிகளுக்கும் பணி ஒதுக்கப்படுகிறது. இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அலுவலர்கள் புலம்புகின்றனர்.தமிழ்நாடு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள் டெல்லஸ் கூறியதாவது:
மதுரையில் உதவிபெறும் பள்ளி அலுவலர்களுக்கு இப்பணிகள் கடும் சவாலாக உள்ளது. மாவட்டத்தில் 480க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் பணி ஒதுக்கப்படுகிறது. உதாரணமாக மதுரை நகரில் உள்ள பள்ளி அலுவலர்களுக்கு 40 கி.மீ.,க்கும் துாரத்தில் உள்ள எழுமலை, கள்ளிக்குடி, மேலுார், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதி தேர்வு மையங்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.அந்த மையத்திற்கு தினம் பஸ் மூலம் செல்லவே இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால் அலுவலர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். இந்தாண்டாவது அவர்களுக்கு 6 கி.மீ.,க்குள் உள்ள பள்ளி தேர்வு மையங்களில் பணி ஒதுக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.