திறப்பு விழா காணும் முன் மேம்பாலம் சேதம்: ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆய்வு
திறப்பு விழா காணும் முன் மேம்பாலம் சேதம்: ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆய்வு
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:51 AM
பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி இருந்ததால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.இதனால், இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுவாச்சூர் கிராமத்தில் 14 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு, அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆமை வேகத்தில் நடந்த கட்டுமான பணிகள், சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. திறப்பு விழா, இம்மாதம் கடைசி வாரத்தில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது; மழையின் போது, நீர்க்கசிவும் உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.அந்த இடங்களில் சிமென்டால் பூசி, உட்புறம் ஒட்டும் பணி நடந்து வருகிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழாமல் இருக்க, இரும்பு குழாய்களால் தாங்கி பிடிக்கும் வகையில் சீலிங் பகுதி மாற்றப்பட்டது. திறப்பு விழா காணும் முன், மேம்பாலத்தின் உறுதித் தன்மை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் சேஷாங் பிஷ்னோய் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளார். ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயரதிகாரிகள் இருந்தனர்.