30,981 தொழில்முனைவோர் 2.5 ஆண்டுகளில் உருவாக்கம்: அமைச்சர் அன்பரசன்
30,981 தொழில்முனைவோர் 2.5 ஆண்டுகளில் உருவாக்கம்: அமைச்சர் அன்பரசன்
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:57 AM
சென்னை:
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 30,981 இளைஞர்கள், புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.உலக முதலீட்டாளர் மாநாட்டில், வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இரண்டரை ஆண்டுகளில், 12,182 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 824.40 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.முன் மாதிரி திட்டம்
அனைத்து பிரிவு மக்களையும், தொழில் முனைவோர்களாக உருவாக்க, ஐந்து வகையான சுய தொழில் திட்டங்களை, முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 1,099.86 கோடி ரூபாய் மானியத்துடன், 3,890.59 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு, 30,981 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.முதல்வரின் முன்மாதிரி திட்டங்களால், ஸ்டார்ட் அப் தர வரிசையில், இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழகம், தற்போது மூன்றாம் நிலைக்கு முன்னேறி, லீடர் தகுதியை பெற்றுள்ளது.மாணவர்கள், இளைஞர்கள், படிக்கும் காலத்திலேயே, தொழில் முனைவோர்களாக உருவாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளில், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 8.98 லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.நிதியுதவி
கடந்த இரண்டு ஆண்டுகளில், 266 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு, 7.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளது. மேலும், 324.66 கோடி ரூபாய் மதிப்பில், 519 ஏக்கர் பரப்பளவில், எட்டு தொழிற்பேட்டைகள் புதிதாக துவக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, எட்டு தொழிற்பேட்டைகளை, 325.64 ஏக்கர் பரப்பளவில் அமைக்க, பணிகள் நடந்து வருகின்றன.குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் துவங்கவும், கிண்டி, அம்பத்துார், சேலம் ஆகிய இடங்களில், 175.18 கோடி ரூபாய் மதிப்பில், 264 தொழில் கூடங்கள் கொண்ட, புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.தொழிலாளர்கள் தங்குவதற்கு, அம்பத்துார், கோவை குறிச்சி தொழிற்பேட்டைகளில், 51.47 கோடி ரூபாயில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அவை விரைவில் திறக்கப்பட உள்ளன. தேசிய ஏற்றுமதி வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 16 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.174 சிறு தொழில் நிறுவனங்களிடம்
ரூ.41 கோடிக்கு கொள்முதல் வாங்குபவர் - விற்பவர் சந்திப்பின் வாயிலாக, 174 சிறு நிறுவனங்களிடம் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்கள், 41 கோடி ரூபாய்க்கு பொருட்களை கொள்முதல் செய்துள்ளன என குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வாங்குபவர் - விற்பவர் சந்திப்பு நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 39 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது பேசும்போது, பல மாநிலங்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றன. அதில், பெரிய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; தமிழகத்தில் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தான் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார். குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் பேசும்போது, தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை, வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். பின், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:வாங்குவோர், விற்பவர் சந்திப்பின் வாயிலாக, புதிய சந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியாளர்களுக்கு, நீடித்த நிலையான வர்த்தக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 174 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 41 கோடி ரூபாய்க்கு உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதில், 73 முதல் முறை ஏற்றுமதியாளர்கள், 16.61 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.