UPDATED : ஜன 11, 2024 12:00 AM
ADDED : ஜன 11, 2024 09:36 AM
ஓமலுார்:
தமிழ்நாடு பல்கலை எஸ்.சி., எஸ்.டி., ஆசிரியர் சங்கம் சார்பில், சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை முன், நேற்று மாலை, 4:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலர் குமார் தலைமை வகித்தார். அதில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் முறைகேடு, பட்டியலின மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மண்டல செயலர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின் நிருபர்களிடம் குமார் கூறுகையில், துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல்(பொ) உள்ளிட்ட சில பேராசிரியர்கள் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். வழக்கு பதிந்தால், சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். துணைவேந்தர், பல்கலைக்கு வந்து பணிபுரிகிறார். அவரால் நியமிக்கப்பட்ட பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி(பொ) பணியில் உள்ளார். இது பல்கலை சட்டவிதி மீறல். பல்கலையில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியுதவியில் முறைகேடு நடந்துள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளராக இருந்த தங்கவேலை, அரசு உடனே, சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என்றார்.