வருஷநாடு அருகே 13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு!
வருஷநாடு அருகே 13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு!
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 09:59 AM
கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் வருஷநாடு தங்கம்மாள்புரம் அருகே கி.பி., 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நில தான எல்லையை குறிக்கும் கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்களான பள்ளி ஆசிரியர்கள் செல்வம், பழனிமுருகன், ஜெயலட்சுமி தங்கம்மாள்புரம் பொட்டியம்மாள் கோயில் பகுதியில் கள ஆய்வு செய்தனர். இடிந்த பழமையான சிவன் கோயில் கட்டுமான பலகை கல்லில் ஆறு வரிகளில் அழகான எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு மண்ணில் புதைந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். கல்வெட்டில் சேறுவார் பெற்ற செவ்வை வரம்புக்குத் தெற்கு இன்னான் கெல்லைக்கு என்று எழுதப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
கல்வெட்டு தானம் அளிக்கப்பட்ட ஒன்றின் துண்டு கல்வெட்டு இது. அதில் வரம்பு என்பது வயல் வரப்பு அல்லது மலைக்குன்றை குறிக்கும் அதன் எல்லை விவரம் தெரிவிக்கும் பகுதி இது. கல்வெட்டு முழுமையாக கிடைக்கப் பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இப்பகுதியில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் பெயரும், ஆண்டதும், இந்த ஊரின் பழமையான பெயர் உதாரம் நல்லுார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது எங்களால் இரண்டாம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்கு வழங்கிய நிலக்கொடை, பிற தானங்களின் நான்கு எல்லைகளை குறிக்கும் செய்திகளை தரும் கல்வெட்டாக இது இருக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.