இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர்
இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர்
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 10:05 AM
திருப்பூர்:
உளவியல் சார்ந்த தன்னம்பிக்கை விதைகளை இளைஞர்களிடையே விதைத்தவர் சுவாமி விவேகானந்தர் என தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு பேசினார்.திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாவை விழா மற்றும் விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. திருக்கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் ஞான பூபதி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சின்னையா வரவேற்றார்.விழாவில், தேசிய சிந்தனை பேரவை மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு பேசியதாவது:கடந்த, 19ம் நூற்றாண்டில் இறுதியில், நாட்டின் விடுதலை போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்.கன்னியாகுமரி பாறையில் அமர்ந்து, எதிர்கால வல்லரசு இந்தியா என்று மூன்று நாட்கள், இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காக தவம் இருந்தார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வீடுகளிலும் சுவாமி விவேகானந்தர் புத்தகங்கள் இருப்பதைக் கண்டு, ஆங்கிலேயர் அதிர்ச்சி அடைந்தனர்.உடலும் மனமும் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். இன்றைய இளைஞர்களுக்கு இதுவே முக்கிய தேவை. பகவத் கீதையை எந்த அளவிற்கு கடைபிடிக்கிறோமோ அதே அளவிற்கு கால்பந்தாட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உடலினை உறுதி செய்ய வேண்டும் என்று புரட்சிகர கருத்துக்களை எழுதியவர்.சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் எந்த காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருப்பது தான் மிகச் சிறப்பு. பாரத தேசத்தில், மாதத்திற்கு மாதம் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடி வருகிறோம். வெளி நாடுகளில், பண்டிகைகள் இல்லாத காரணத்தால், காதலர் தினம் போன்ற தினங்களை கொண்டாடி தங்கள் மனச்சுமைகளை போக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். நமக்கு அப்படிப்பட்ட அர்த்தமற்ற பண்டிகைகள் தேவையில்லை. பாவை விழா போன்ற அர்த்தமுள்ள பண்டிகையை கொண்டாட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.