பசுமை சாம்பியன் விருது பெற கோவையில் மூவருக்கு வாய்ப்பு
பசுமை சாம்பியன் விருது பெற கோவையில் மூவருக்கு வாய்ப்பு
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 10:08 AM
கோவை:
தமிழகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு, பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 100 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்.தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் தகுதியுடையவர்கள்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பசுமை சாம்பியன் விருதுக்காக மதிப்பீடு செய்யப்படுவர். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய பசுமை பொருட்கள், பசுமை தொழிற்கூடங்களில் மேற்கொண்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, காலநிலை மாற்ற தகவமைப்பு மற்றும் தவிர்ப்பு, காற்று மாசு கட்டுப்படுத்துல் தொடர்பாக ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும்.விண்ணப்பம் செய்வோரில் இருந்து, கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மூன்று விருது வழங்கப்படும்.இவ்விருதுக்கான தகுதிகள், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விதம், விண்ணப்ப படிவம் போன்றவற்றை, www.tnpcb.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஏப்., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.