UPDATED : ஜன 17, 2024 12:00 AM
ADDED : ஜன 17, 2024 10:33 AM
அருப்புக்கோட்டை:
புலிகள் பயங்கரமான விலங்கு என்பது எல்லோருக்குமான மன நிலை ஆனால், அவைகளை சீண்டாத வகையில் பரமசாது என்கிறார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வைல்ட் லைப் போட்டோகிராபர் தமிழ்வாணன்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஹாபி உள்ளது. அந்த வகையில் அருப்புக்கோட்டையில் போட்டோ லேப் வைத்துஇருக்கும் தமிழ்வாணனுக்கு, பறவைகள், விலங்குகளை படம் எடுக்கும் வைல்ட் லைப் போட்டோகிராபியில் அதிக ஆர்வம் உள்ளவர். கிட்டதட்ட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று விதம்விதமான பறவைகள், விலங்குகளை படம் எடுத்து அசத்தி வருகிறார்.அதிலும், வன விலங்கான புலிகளை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து, அவை குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறார். இதற்காக சிறப்பு காமிரா, டெலி லென்சுகளை வாங்கி படம் எடுக்கிறார்.தமிழ்நாட்டில் களக்காடு, முண்டந்துறை, மேற்கு தொடர்ச்சி மலை, வடமாநிலங்கள் பந்திப்பூர், கபினி கேகுடி, கேரளா, தேக்கடி, தடபா ரிசர்வ் லைன், ராஜஸ்தான் உட்பட காடுகள், சரணாலயங்களுக்கு சென்று புலிகளை படம் எடுத்துள்ளார்.இது குறித்து, தமிழ்வாணன்: நான் பார்த்த வரையில் புலிகள் பரமசாது. நான் 10, 15 அடி தூரத்திலிருந்து புலிகளை படம் எடுத்துள்ளேன். புலிகள் காடுகளில் 25 கி.மீ., பரப்பளவில் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதில் உயிர் வாழும். 2 ஆண் புலிகள் சந்தித்தால் எல்லை பிரச்சனை ஏற்பட்டு சண்டை போடும்.சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படும். சில வகை புலிகள் 500, 1000 கி.மீ.. தூரம் வரை இருப்பிடம் தேடிச் செல்லும். இயற்கையாகவே புலிகள் சூடான உடல் நிலையை கொண்டவை. இரையை உண்ட பின் அதிக நேரம் தண்ணீரில் இருக்கும். இதனால், நீர்நிலைகளை தேடிச் செல்லும். புலிகள் தாவர உண்ணிகளை கட்டுப்படுத்தி வனத்தை பாதுகாக்கிறது., என்றார்.