UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 10:03 AM
சென்னை:
கலை, அறிவியல்கல்லுாரிகளில் மட்டுமே நடத்தப்படும் பி.சி.ஏ., படிப்பை, இனி இன்ஜினியரிங் கல்லுாரியிலும் நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., பரிசீலித்துவருகிறது.நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தொழில்நுட்ப கல்லுாரிகளில், இன்ஜினியரிங், ஆர்கிடெக்ட் படிப்புகள் நடத்தப்படுகின்றன. கலை, அறிவியல் கல்லுாரிகளில், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி., - பி.ஏ., போன்ற இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், புதிய கல்வி கொள்கையின்படி, அனைத்து வகை தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கும், இனி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, கலை, அறிவியல் கல்லுாரிகளில் நடத்தப்படும் பி.சி.ஏ., மற்றும் பி.பி.ஏ., மேலாண் படிப்புக்கும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற புதிய விதியை, மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது.இந்நிலையில், பி.சி.ஏ., என்ற கணினி பயன்பாடுகள் தொழில்நுட்ப படிப்பை, கலை, அறிவியல் கல்லுாரிகள் மட்டுமின்றி, இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் நடத்தி கொள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம், சில கல்லுாரிகள் விருப்பம் தெரிவித்து, அனுமதி கேட்டுள்ளன.இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., பரிசீலினை செய்வதாகவும், வரும் கல்வி ஆண்டின் சேர்க்கைக்கு, அங்கீகாரம் வழங்கும்போது, உரிய முடிவெடுத்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், பி.சி.ஏ., படிப்பை நடத்த வாய்ப்புள்ளதாக, கவுன்சில்வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.