UPDATED : ஜன 22, 2024 12:00 AM
ADDED : ஜன 22, 2024 09:46 AM
சென்னை:
சென்னையில் நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்று நிறைவு பெற்றது.புத்தக காட்சியின் நிறைவு நாளான நேற்று, நீதிபதி அரங்க மகாதேவன் பேசியதாவது:
நல்ல படைப்புகள் மண்ணின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. பாரம்பரியத்தை நேசிக்காதவர்களிடம் வாசிப்பு பழக்கம் இருக்காது. ஒரு படைப்பை உணர்ந்து படிப்பவர்களுக்கே வாழ்க்கையின் எளிமையும், செழுமையும் புரியும்.பாரம்பரிய தமிழ் நுால்களில் பல அறிவியல், கணிதத்தில் உச்சம் தொட்டுள்ளன. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நம் கட்டுமானங்கள் எந்த அறிவியல், கணிதப்படி கட்டப்பட்டன என்பது ஆச்சர்யமாக உள்ளது.ஒரு தாள் ஊற்றி, ஒரு தாள் ஏற்றி என, சிதம்பரம் நடராசரைப் போற்றும் தமிழ்ப் பாடலில், அணுக்கதிர் வீச்சின் தத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழ் ஓலைச் சுவடிகளில் இன்னமும் பதிப்பிக்கப்படாதவை நிறைய உள்ளன. பிரான்ஸ் நாட்டு நுாலகத்திலும், கோல்கட்டா நுாலகத்திலும், பண்டைய தமிழ் ஓலைச் சுவடிகள் நிறைய உள்ளன.இதுபோல், பல இடங்களில் நம் ஓலைச் சுவடிகள் இருக்கும். அவை பதிக்கப்பட்டு நுால்களாக வெளிவந்தால், சிந்தனையின் உச்சம் தொட்ட மனிதர்கள் தமிழர்கள் தான் என்பது உலகிற்கு தெரியவரும்.