கவின் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே நோக்கம்!
கவின் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே நோக்கம்!
UPDATED : ஜன 24, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 05:02 PM
கட்டுரையாளர், ஆர்டிஸ்ட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர். மாநில அரசின் கலைப்பண்பாட்டு துறை சார்பில் நடத்தப்படும் கவின் கலை போட்டிகளின் நடுவர். மனிதம் காப்போம் பெயரில் கல்வி, மருத்துவம், சட்டம், சுற்றுச்சூழல், இயற்கை தொடர்பான விழிப்புணர்வை, கிராமங்கள் தோறும் திண்ணை பிரசாரம் வாயிலாக ஏற்படுத்தி வருபவர்.கவின்கலை தொன்மையானது; கலைகளில் முதன்மையானதும் கூட. மனித சமூகம் தொடக்க காலத்தில் காடுகளில் வாழ்ந்தது வரலாறு. விலங்குகளின் வாழ்வியல் சூழலை அறிந்து அதற்கேற்ப, தங்கள் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொண்டனர். அப்படி வாழ்ந்த மனித சமூகம், இன்று மிகப்பெரும் மாற்றத்தை, வேறுபாட்டை அடைந்திருப்பதற்கு அடிப்படை காரணம் கலை தான்.காடு, குகைகளையொட்டி வாழ்ந்த மக்கள், அவர்கள் சார்ந்த விஷயங்கள், தினமும் நடக்கும் நிகழ்வுகள், தங்கள் அனுபவங்களை அங்குள்ள பாறைகளில் கீறல்களாக, ஓவியங்களாக தீட்டி வைத்தனர். அவைதான், மனித சமுதாயத்தின் தொன்மையை அறிந்துகொள்ளும் வரலாற்று சான்றுகளாக மாறியுள்ளது. ஆனால், அவை முற்றிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.நீடித்த தொன்மை
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது தமிழ் பாரம்பரியம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கீழடி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வு அடிப்படையில், 4,000, 5,000 ஆண்டுகள் தொன்மையானது என, தமிழ் சமூகத்தின் தொன்மை நீட்டித்து சொல்லப்படுகிறது.இருப்பினும், நம் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களின் ஆய்வு முழுமை பெறவில்லை. பாறை ஓவியங்கள் தான், ஒரு சமூகத்தின் தொன்மையை அறியக்கூடிய மிக முக்கியமான சான்று. எழுத்துக்கள் உருவான பிறகு தான், வரலாற்று காலம் என்கிறோம்; அதற்கு முந்தையவை, வரலாற்றின் முந்தைய காலம் என்கிறோம்.இந்த இடைவெளியின் தொன்மையை அறிந்து கொள்ள பாறை ஓவியங்கள் தான் மிக முக்கிய ஆவணமாக உள்ளன. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், பாறை ஓவியங்களை ஆய்வு செய்யும் போது, வரலாற்று காலத்துக்கும், அதன் முந்தைய காலத்துக்கும் இடையேயான இடைவெளியை அறிந்து கொள்ள முடியும்.துவக்க நிலையே ஆதாரம்
பொதுவாக, ஒரு ஓவியம் என்பது, தொடக்க நிலையில் இருந்து முழுமை பெற வேண்டும். முதலில், கூறுகளாக வரையப்படுவது; அந்த கூறுகள் முழுமை பெற்றதாக மாற்றப்படுவது; அதில், குறிப்பிட்ட வர்ணங்கள் தீட்டுவது; பின், கூடுதல் வர்ணங்கள் தீட்டுவது; இரு பரிமாணங்கள், முப்பரிமாணங்களாக மாறுவது என்பதுதான், ஒரு ஓவியத்தின் இயல்பு. மற்ற நாடுகளில், முழுமையான ஓவியங்கள் தான் உள்ளன. ஆனால், நம் நாட்டில் தொடக்க நிலை ஓவியங்கள் நிரம்ப உள்ளன. இதுவே, நம் பழமையின் தொன்மையை உணர்த்துகிறது; இதை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தால், தொன்மையை கண்டுபிடிக்க முடியும்.தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கோவை, தேனி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில், நிறைய பாறை ஓவியங்கள் உள்ளன. பாறை ஓவியங்கள் என்பது, மனித நடமாட்டம் குறைந்த இடங்களில் மட்டுமே இருப்பதால், சமூக விரோதிகளால் அந்த இடங்கள் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், புதுக்கோட்டையில் உள்ள சித்தன்ன வாசல் சுவர் ஓவியம் போன்றவை, தொல்லியல் துறையினரால் மிகச்சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது; இந்த ஓவியங்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களுக்கு நிகராக பேசப்படுகிறது.புதிய பாட திட்டம்
கவின் கலை என்பது, முதன்மை கலை என்ற நிலையில், அதுதொடர்பாக சிற்பம் உருவாக்குவது; களிமண், காய்கறி, சோப்பு, சாக்பீஸ் என, பலவகை செதுக்கு சிற்பங்கள் உருவாக்குவது என, நிறைய வகைகள் உள்ளன. ஓவியத்தின் பரிணாம வளர்ச்சி தான், கற்பனை வளம் தொடர்புடைய புகைப்படம் மற்றும் வீடியோ துறை போன்றவை. இந்த துறையில் மாணவர்கள் சாதிக்க விரும்பினால் கூட, ஓவிய ஞானம் வேண்டும். அப்போது தான், கற்பனை திறன் வளரும்.தமிழக பாட திட்டத்தில், ஓவியக்கலை துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. தற்போது, கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், கவின் கலையில் ஆற்றல் பெற்ற ஆசிரியர்களால், அவை கற்பிக்கப்படும் போது தான், மாணவர்களின் ஓவிய ஆற்றல் மேம்படும். தற்போது பழைய பாடத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது.கவின் கலை தொடர்பான சிறப்பான, நவீன பாட திட்டத்தை, தமிழக அரசு வடிவமைத்துள்ளது. கவின் கலை கல்லுாரி பாடத் திட்டத்துக்கு இணையான அந்த பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மாணவர்களின் கவின்கலை திறமை மேம்படும்.படைப்பாளிகளுக்கு எதிர்காலம்
ஓவியர்கள் ஊக்குவிப்புடன் இருந்தால் தான், அவர்களது படைப்புகள் சிறப்பானதாக இருக்கும் என்ற அடிப்படையில், ஓவியத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஓவிய கலைஞர்களை ஒருங்கிணைத்து, நலிவடைந்துள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஆர்டிஸ்ட் கிளப் ஆப் தமிழ்நாடு என்ற குழுவை உருவாக்கியுள்ளோம். பலர், ஓவியங்களை பிரிண்ட் அவுட் எடுத்து, அதன் மீது வரைந்து, தங்களை ஓவியராக காட்டிக்கொள்கின்றனர்.அத்தகையவர்களாக இல்லாமல், எந்தவொரு பின்புலமும் இல்லாத, முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலான ஓவியர்களை உறுப்பினர்களாக்கி ஊக்குவித்து வருகிறோம். லைவ் ஆர்ட் ஷோ வாயிலாக மட்டுமே, அவர்களை ஊக்குவிக்கிறோம். மாநில அளவில் எங்கள் அமைப்பை விரிவுபடுத்தி வருகிறோம். கவின் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது; உண்மையான, தகுதியான கலைஞர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்வது தான் எங்களின் நோக்கம்.அந்த வகையில், கிராமப்புறங்களைச் சேர்ந்த, 20 முதல் 25 பேர், தங்கள் ஓவியத்திறமையால் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஓவிய வேலைப்பாடு தேவைப்படும் நிறுவனங்கள், எங்கள் அமைப்பின் வாயிலாக சிறந்த ஓவியர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். சிறந்த படைப்பாளிகள், தங்கள் படைப்பை வணிகத்துக்கு உகந்ததாக மாற்ற, இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது.வழிகாட்டுதல் அவசியம்
ஓவியம் தொடர்பான உயர்கல்வி பயில கவின் கலைக்கல்லுாரி என ஒன்று இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், கலை இயக்குனர்கள், பத்திரிகை துறையில் ஜொலிக்கும் பலர், கவின் கலை கல்லுாரியில் பயின்றவர்கள் தான்.தற்போது, பிரபலமாகி வரும் அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், நாம் கற்றுத்தருவதை செய்யும். ஆனால், அந்த கற்பனையாற்றல் அந்த கருவிக்கு இருக்காது. ஆக, கவின் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரின் கற்பனையால் தான் அந்த கருவி இயங்குகிறது.ஆக, ஒரு படைப்பாளியின் சிந்தனை, பார்வை வித்தியாசமானதாக இருக்கும் போது, அவனது படைப்பு போற்றப்படுகிறது. அனைத்து மாணவர்களும் மருத்துவம், பொறியியல் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து விட முடியாது. அனைவருக்கும் ஒரே சிந்தனை இருக்காது. ஒவ்வொருவருக்கும் சிந்தனை மாறுபடும். அதனடிப்படையில், அவர்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.- ச.தியாகராஜன்