கல்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு பரிக் ஷா பே சர்ச்சா ஓவிய போட்டி
கல்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு பரிக் ஷா பே சர்ச்சா ஓவிய போட்டி
UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:33 AM
கல்பாக்கம்:
பள்ளி மாணவர்களிடம், மன அழுத்தம், சோர்வு இல்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடியின் தலைமையில், எக்சாம் வாரியர்ஸ் இயக்கம் நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, கற்றலில் மகிழ்ச்சி மற்றும் நிறைவை ஏற்படுத்த, பரிக் ஷா பே சர்ச்சா செயல்படுத்தப்படுகிறது. அதை சார்ந்து, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே, பரிக் ஷா பே சர்ச்சா - 2024 ஓவியப் போட்டி, கல்பாக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய எப்.எம்.சி.ஜி. குழு இணை இயக்குனர் ஜெயராமன், பள்ளி முதல்வர் ஷைஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 9 முதல் 12ம் வகுப்பு மாணவ - மாணவியர் 100 பேர் பங்கேற்றனர்.அவர்கள், சந்திரயான், விகாசித் பாரத், ஆதித்யா எல் 1, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட கருப்பொருளில், ஓவியங்கள் வரைந்தனர். மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி முதல்வர் ராமன், ஓவிய விரிவுரையாளர் பரிளமா, அணுசக்தி மத்திய பள்ளி முதல்வர் சேஷன், செங்கல்பட்டு, ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் நடுவராக இருந்து, முதல் ஐந்து இடங்களை பிடித்த ஓவியங்களை தேர்வு செய்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ், சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும், டிஜிட்டல் சான்றிதழ், எக்சாம் வாரியர்ஸ் புத்தகம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.