தலைமை ஆசிரியர் வீசிய பிரம்பு: மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு
தலைமை ஆசிரியர் வீசிய பிரம்பு: மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு
UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:47 AM
ஆத்துார்:
தலைவாசலில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்பு வீசியெறிந்ததில், 10 வயது மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர், உறவினர்கள் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி, மும்முடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின், 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 22ல், வகுப்பறையில் இருந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியருமான திருமுருகவேள், 56, பாடம் தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார். சிலர் பதில் கூறாததால், கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியிலான பிரம்பை துாக்கி வீசியுள்ளார். அப்போது, 10 வயது மாணவியின் இடது கண் மீது விழுந்தது. உடனே மாணவிக்கு, தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் சேலம், மதுரை ஆகிய தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில், மாணவியின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மலைக்குறவன் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று, ஆத்துார் ஆர்.டி.ஓ., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அதில், மாணவி மீது பிரம்பு வீசியதில், 95 சதவீதம் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் பார்வை பாதித்துள்ள மாணவிக்கு, மேல்சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத்துார் தாலுகா செயலர் முருகேசன் கூறுகையில், தலைமை ஆசிரியர் முருகவேள் பிரம்பு வீசியதில், மாணவியின் கண் பார்வை பாதித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், சேலம் மாவட்ட செயலராக உள்ள அவரிடம், இதுபற்றி கேட்டால் ஆளும் கட்சியில் உள்ளதாகவும், அமைச்சர் வரை பழக்கம் உள்ளது என்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ் கூறுகையில், மாணவி மீது பிரம்பு வீசியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட புகார் குறித்து, சேலம் கலெக்டர் கார்மேகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, துறை ரீதியான விசாரணை நடத்தப்படும், என்றார். தலைமை ஆசிரியர் முருகவேள் கூறுகையில், பாடவேளையின்போது, பிரம்பை துாக்கி வீசியபோது, தவறுதலாக மாணவியின் கண் மீது விழுந்துள்ளது. மாணவியை அரசு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, என் சொந்த செலவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். மாணவிக்கு, இடது கண் பார்வை தெரியவில்லை என்று கூறியதால், பார்வை கிடைப்பதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். சிலர், என் மீது பொய்யான புகார் கூறி வருகின்றனர், என்றார்.