அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் உருவாக்கி தருவது அனைவரின் கடமை: எம்.பி.,
அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் உருவாக்கி தருவது அனைவரின் கடமை: எம்.பி.,
UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:48 AM
நாமக்கல்:
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும், வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பது அனைவரின் கடமை என எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு - 2024ல், 32 பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சிறந்த பள்ளி மேலாண் குழுவிற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் பங்கேற்று, சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வியை கருத்தில் கொண்டு, காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசுப்பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு, அரசுப்பணி தேர்வில் ஒதுக்கீடு வழங்கி உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு, 1,010 அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2023- 24ம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட, 32 பள்ளிகளின் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும், வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பது அனைவரின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியன், கணேசன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.