பண்பாட்டை மாணவர்கள் அறிவதற்கு நிதி ஒதுக்கீடு கருத்தரங்கில் தகவல்
பண்பாட்டை மாணவர்கள் அறிவதற்கு நிதி ஒதுக்கீடு கருத்தரங்கில் தகவல்
UPDATED : ஜன 27, 2024 12:00 AM
ADDED : ஜன 27, 2024 11:00 AM
திருப்புல்லாணி:
திருப்புல்லாணியில் உள்ள எஸ்.எஸ்.ஏ. நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.தலைமை ஆசிரியர் புரூணா ரத்தினகுமாரி தலைமை வகித்து புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.தொல்லியல் ஆய்வாளரும், மன்றச் செயலாளருமான வே.ராஜகுரு பேசியதாவது:
மாணவர்களிடையே பன்முகம் கொண்ட வளமான நமது பண்பாட்டை கொண்டு சேர்த்திட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை செயல்படுத்த தமிழகம் முழுவதும் 119 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், 37 கல்லுாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, தொல்லியல் பயிற்சி, களப்பணி, சுற்றுலா ஆகிய செயல்பாடுகள் நடைபெற உள்ளன என்றார்.கருத்தரங்கில் பல்லவர் கட்டடக்கலை பற்றி பைரோஸ், சேதுபதி கட்டடக்கலை பற்றி சத்தீஸ்வரி, பாண்டியர் கட்டடக்கலை பற்றி முகமது சகாபுதீன், மாட கோயில்கள் பற்றி பூஜா ஸ்ரீ, சிற்பக்கலை பற்றி சுபா, ஓவியக்கலை பற்றி ஸ்ரீதன்வி, விஜயநகர கட்டடக் கலை பற்றி ஸ்ரீ ஐஸ்வர்யா, சோழர் கட்டடக்கலை பற்றி அல்ஷியா ஆகியோர் விரிவாக பேசினர். 9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீ விபின் நன்றி கூறினார்.சப்ரன் அப்ரா மற்றும் ஐனுன் ரிப்கா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கண்காட்சியில் கட்டடக்கலை சிறப்புமிக்க குடைவரை கற்கோயில்கள், அரண்மனை ஓவியங்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.