UPDATED : ஜன 28, 2024 12:00 AM
ADDED : ஜன 28, 2024 11:00 AM
காந்திமாநகர்:
பாரதியின் தொலைநோக்கு பார்வை என்ற தலைப்பில் நடந்த, இளம் கவிஞர் விருதுக்கான போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார், காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தீபிகா.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான இளம் கவிஞர் விருது போட்டி நடந்தது. இதில், கோவை மாவட்ட அளவிலான போட்டியில், வேறுபாடற்ற சமுதாயத்திற்கான பாரதியாரின் தொலைநோக்கு பார்வை என்ற தலைப்பில், கவிதை எழுதி அதற்கான பொருள் விளக்கிய, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி தீபிகா, முதல் பரிசு பெற்றார். இவர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.மாணவி தீபிகா கூறுகையில், கட்டுரை, நடன போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்றுள்ளேன். கவிதைக்கான முதல் போட்டியிலே, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பாரதியாரின் சில புத்தகங்களை வாசித்துவிட்டு, சமுதாய மேம்பாடு, ஆண், பெண் சமத்துவம், சாதி பாகுபாடு குறித்த அவரின் பார்வையை புரிந்து கொண்டபிறகு, இக்கவிதை எழுதினேன்.பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்த காலத்தில், பெண்ணுக்குள்ளே உலகை கண்டான் பாரதி. ஒரு ஆணாக இருந்து, பெண்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுத்த பாரதி, இன்னும் பல தலைமுறைகள் தாண்டியும், மகாகவியாகவே வாழ்வார், என்றார்.