அரசாணையில் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குழப்பம்
அரசாணையில் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குழப்பம்
UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:08 AM
கோவை:
ஊதிய உயர்வு குறித்த அரசாணையில், பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக இடம்பெற்றிருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட எட்டு கலைப்பாடங்களுக்கு, கடந்த 2012ல், 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரைநாட்கள் வேலை செய்யும் இவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.காலமுறை ஊதியம் வழங்க கோரி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தது.ஆனால், ஆட்சியை பிடித்த பிறகு, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றாததை கண்டித்து, கடந்த அக்டோபர் மாதம், சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, 2,500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்தார்.இதற்கான அரசாணை வெளியான நிலையில், அதில் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக இடம்பெற்றிருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை தலைப்பில், 12,105 பேர் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிவதாக உள்ளது.அரசாணை விளக்கத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், 10,359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே அரசாணையில், பணியில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை, வெவ்வேறாக இடம்பெற்றிருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார்.