UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:52 AM
உடுமலை:
பள்ளி மாணவர்கள், இரண்டு சக்கர வாகனங்களில் முறையான அனுமதி இல்லாமல் செல்வதை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போது பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதால், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் குறைந்துவிட்டது. திருப்புதல் தேர்வுகள், அலகு தேர்வுகள் என மாணவர்களுக்கான பயற்சிகள் மட்டுமே நடக்கிறது.இதனால் பள்ளி நேரத்திலும் மாற்றம் இருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் இரண்டுசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இவ்வாறு வாகனம் ஓட்டுபவர்கள், முறையான உரிமம் பெறாமலும், அதிகமான வேகத்திலும் நகரில் வலம் வருவதால், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.பிரதான ரோடுகளை தவிர்த்து, பள்ளிக்கு செல்லும் குடியிருப்புகளின் வழியாக மாணவர்கள் வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினாலும், வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்திச்செல்வதும் நடக்கிறது. முறையான உரிமம் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமலும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் செல்வது என, மாணவர்கள் ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இதுபோன்ற ஆபத்தான பயணத்தை கட்டுபடுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.