பொதுத்தேர்வில் சாதிப்போம்! அரசு பள்ளி மாணவர்கள் சபதம்
பொதுத்தேர்வில் சாதிப்போம்! அரசு பள்ளி மாணவர்கள் சபதம்
UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 09:43 AM
திருப்பூர்:
பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் சாதிப்போம் என்று மாணவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. வரும் 12ம் தேதி செய்முறைத்தேர்வு துவங்க உள்ளது.பொதுத்தேர்வுக்கு இன்னமும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளை துவங்க, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வுகள் நடந்து வருவதால், பள்ளி வேலை நேரம் முடிந்த பின், மாலை 4:30 முதல், 6:30 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் என்ற அடிப்படையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்வுகள் துவங்கும் வரை இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.குழு மூலம் கண்காணிப்பு
கே.எஸ்.சி., பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறுகையில், மாலை நேரம் மாணவர் களுக்கு தேவையான சிற்றுண்டி, முன்னாள் மாணவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மாணவர் சிறப்பு வகுப்பு குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். மாணவர்கள் சரியான நேரத்துக்கு வீடு சென்று விட்டார்களா, படிப்பில் தினசரி கவனம் செலுத்துகிறார்களா என்பதை வாட்ஸ்ஆப் குழு மூலம் கவனித்து வருகிறோம், என்றார்.கே.எஸ்.சி., போன்றே, நஞ்சப்பா, ஜெய்வாபாய், பழனியம்மாள், இடுவம்பாளையம், கருவம்பாளையம், விஜயாபுரம் உள்ளிட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசுப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், பொதுதேர்வில் நாங்கள் நிச்சயம் சாதிப்போம் என்றனர்.

