கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:18 AM
யஷ்வந்த்பூர்:
பெங்களூரின், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பான சூழ்நிலை உருவானது.பெங்களூரின் யஷ்வந்த்பூரில், கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. நேற்று காலை பள்ளியின் இணையதளத்தை, பள்ளி முதல்வர் பார்வையிட்டார். அதில் மிரட்டல் ஒன்று வந்திருந்தது.இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். காலை 10:20 மணிக்கு வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது. பள்ளி முதல்வர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து யஷ்வந்த்பூர் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறைகள், வளாகம் என, அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர். அது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.நேற்று ஞாயிறு என்பதால், பள்ளி விடுமுறை. மாணவர்கள் இல்லாததால், பள்ளியை சோதனையிட போலீசாருக்கு வசதியாக இருந்தது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.பள்ளி முதல்வர் அம்ருத் பால் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 2023 டிசம்பர் 1ல், பெங்களூரின், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கேந்திரிய வித்யாலயா பள்ளி என்பதால், இந்த பள்ளியில் இந்திய ராணுவத்தினர் பிள்ளைகள், மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர்.விஷமிகள், மக்களை அச்சுறுத்தும் நோக்கில், பொய்யான மிரட்டல் விடுத்துள்ளனர். பள்ளி இணையதளத்துக்கு மிரட்டல் வந்த, மின்னஞ்சல் முகவரி குறித்து, சைபர் குற்றப்பிரிவு வல்லுனர்களிடம் தகவல் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

