மாணவர்களுக்கு சர்ச்சை பாடம்?: மத்திய கல்வி வாரியம் விளக்கம்!
மாணவர்களுக்கு சர்ச்சை பாடம்?: மத்திய கல்வி வாரியம் விளக்கம்!
UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:39 AM
புதுடில்லி:
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகத்தில், டேட்டிங் மற்றும் உறவு தொடர்பான பாடம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், இது தங்களுடைய புத்தகம் அல்ல என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. டேட்டிங் எனப்படும் காதலர்கள் சந்திப்பு மற்றும் உறவு என்ற தலைப்பில், ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளதாக, சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டனர்.இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இது நல்ல முயற்சி என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.இதற்கு, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட இந்த பாடம் அடங்கிய புத்தகத்தை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளதாக பொய் தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.எஸ்.இ., எந்த ஒரு புத்தகத்தையும் வெளியிடுவதில்லை.மேலும், தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் அங்கீகரிப்பதில்லை. இந்த குறிப்பிட்ட புத்தகம், தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

