UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 05:09 PM
சென்னை:
மாணவி செலுத்திய பயிற்சி கட்டணத்துடன் சேர்த்து 10,000 ரூபாயை இழப்பீடாக வழங்க சென்னை தனியார் நீட் பயிற்சி மையத்திற்கு, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:
அண்ணாசாலையில் உள்ள டி.ஜி.கோர்ஸ் என்ற தனியார் நீட் பயிற்சி மையத்தில், என் மகளை பயிற்சியில் சேர்த்தேன். முதல் கட்டமாக 7,500 ரூபாயும், மீதமுள்ள 22,500 ரூபாயை &'பஜாஜ் பைனான்ஸ்&' வாயிலாக செலுத்தினேன்.ஆனால், உறுதி அளித்தப்படி பாடப்புத்தகங்களை பயிற்சி நிறுவனம் வழங்கவில்லை. இதேபோல, மற்ற மாணவர்களும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், மகளை பயிற்சியில் இருந்து விலக்கிக் கொள்ள திட்டமிட்டேன்.ஆனால், பயிற்சி நிறுவனம் கட்டணத்தை திருப்பித்தரவில்லை. நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் இல்லை. சேவை குறைபாடுடன் செயல்பட்ட நிறுவனம், செலுத்திய பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஜி.வினோபா தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சில வகுப்புகளில் மட்டுமே பங்கேற்றதற்காக, செலுத்திய முழு கட்டண தொகைக்கும் பயிற்சி நிறுவனம் உரிமை கோர முடியாது. சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிடித்தம் செய்த கட்டணம் போக 25,000 ரூபாயும், வழக்கு செலவாக 3,000 ரூபாயும், இழப்பீடாக 10,000 ரூபாய் சேர்த்து, மொத்தம் 38,000 ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டது.