UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 07:10 PM
சென்னை:
தமிழகத்தில் இளம் பருவத்தில் உள்ள, 57 சதவீத பெண்கள், 43 சதவீத ஆண்கள், ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில், 15 முதல் 49 வயதுடைய ஆண்களில் நான்கில் ஒருவருக்கும், அதே வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கும் ரத்தசோகை பாதிப்பு இருப்பது, பல்வேறு ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்து உள்ளது.குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என, அனைத்து வயதினரிடமும் காணப்படும் ரத்த சோகை பாதிப்பு, நகர்ப்புற மக்களை காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது.ஆண்களை விட குழந்தை பெறும் வயதில் உள்ள, பெண்களே ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால், பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால், ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே, ரத்த சோகை பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில், 8.7 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 57 சதவீதம் பேர் ரத்த சோகை பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 2 சதவீத பெண்கள், தீவிர ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல, 6.83 லட்சம் ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 43 சதவீத பாதிப்பு; 1 சதவீத தீவிர பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் பள்ளி மாணவர்களுக்கு, ரத்த சோகையை தடுக்கும், &'அயன் சுக்ரோஸ்&' ஊசி போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ரத்த சோகை பாதிப்பை, பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.தீவிர பாதிப்பு கண்டறியப்பட்ட, 11,253 மாணவர்களுக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.