சேலம் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவு
சேலம் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவு
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:30 AM
சென்னை:
சேலம் பல்கலை பொறுப்பு பதிவாளரின் முறைகேடுகள், விசாரணையில் உறுதியானதால், அவரை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் அனுப்பியுள்ள கடிதம்:
பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடு நடந்ததாக, புகார்கள் வந்தன.தணிக்கை தடை
இதுகுறித்து விசாரணை நடத்த, உயர்கல்வித் துறை கூடுதல் செயலர்கள் பழனிசாமி, இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப் பட்டது.இந்த குழுவின் முடிவுகள், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரியார் பல்கலையின் கூடுதல் பொறுப்பு பதிவாளரும், கணினி அறிவியல் துறை தலைவருமான கு.தங்கவேலின் பணி நியமனம், உள்ளாட்சி தணிக்கை தடையில் இடம் பெற்றிருந்தது.அதை நீக்கியிருப்பது சட்டப்படி தவறானது என, நிரூபணமாகியுள்ளது. பதிவாளர் பொறுப்பில், தன் துறைக்கு தேவையான பொருட்களை, ஒரே நிறுவனத்தில் கொள்முதல் செய்ததும், அதற்கு இரண்டு முறை தங்கவேல் பணம் பெற்றதும் நிரூபணமானது.பல்கலை வளாகத்தில், வை-பை நிறுவுதல், பராமரித்தல், அதற்கான மென்பொருள் கொள்முதல், கணினி, இணையதள சர்வீஸ் ஆகியவற்றுக் கான கொள்முதலில், நிதி முறைகேடுகளும் நிரூபண மாகி உள்ளன.அரசின் விதிகளுக்கு முரணாக, பல மென்பொருட்களை கொள்முதல் செய்தது குறித்து, விரிவான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எம்.ஏ.ஜி.எஜூ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் வாங்கிய சாப்ட்வேர் இன்று வரை செயல்படாமல் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.தொலைநிலைக் கல்வி திட்ட உதவியில், ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் படிப்புகளில், முறைகேடுகள், விதிமீறல்கள் மற்றும் தவறான கொள்முதல் ஆகியவை நிரூபணமாகிஉள்ளன.பல்கலை பணிகளை வெளி நிறுவனங்களுக்கு வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. விசாரணை குழு பரிந்துரையின்படி, தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என, அரசு கருதுகிறது.நடவடிக்கை
எனவே, வரும் 29ம் தேதி ஓய்வுபெற உள்ள தங்கவேலுவின் மீதான குற்றச்சாட்டுகளில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, பல்கலை கூடுதல் பொறுப்பு பதிவாளர் மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் தங்க வேலை ஓய்வுபெற அனுமதிக்காமல், அவரை பணியிடை நீக்கம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.