சென்னை பல்கலை வங்கி கணக்கு வருமான வரித்துறை திடீர் முடக்கம்
சென்னை பல்கலை வங்கி கணக்கு வருமான வரித்துறை திடீர் முடக்கம்
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 05:02 PM
சென்னை:
வரவு - செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, சென்னை பல்கலையின் வங்கி கணக்கை, வருமான வரித்துறை முடக்கியுள்ளது.சென்னை பல்கலையின் வரவு - செலவுகள் அனைத்தும், பல்கலை வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில், பல்கலையின் நேரடி வரவு செலவுகள், பாரத ஸ்டேட் வங்கியில் பராமரிக்கப்படுகின்றன.இந்த வங்கிக்கு, வருமான வரித்துறையின் சென்னை அலுவலகத்தில் இருந்து, நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், &'சென்னை பல்கலை தரப்பில் கடந்த, 2017ம் ஆண்டில் இருந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், வங்கி கணக்கின் பணி பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.இதன்படி, சென்னை பல்கலையின் ஸ்டேட் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் அறிந்து சென்னை பல்கலை அதிகாரிகள், வங்கி அதிகாரிகளையும், வருமான வரித்துறை கமிஷனர் மருதுபாண்டியனையும் சந்தித்து, வங்கி கணக்கு முடக்கத்தை நீக்குமாறும், வரவு, செலவு அறிக்கை விபரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும், கடிதம் அளித்துள்ளனர்.இதுகுறித்து, பல்கலை தரப்பில் விசாரித்தபோது, ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை விபரங்கள், வருமான வரித்துறையின் ஆன்லைன் தரவில் சேராமல், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த விளக்கம் பல்கலை தரப்பில், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர்.சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, ஜூன் மாத தேர்வுகள், கடந்த ஆண்டு நடந்தன. இவற்றின் முடிவுகள், பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு பின் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.