UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 10:01 AM
புதுச்சேரி:
கிராமப்புற பள்ளிகளில் ஆறு ஸ்மார்ட் வகுப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் அரசு பள்ளிகள் வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதற்கான அந்தந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அதன்படி கூனிச்சம்பட்டு, பி.எஸ்.பாளையம், காட்டேரிக்குப்பத்தில் உள்ள ஆரம்ப பள்ளி, மேனிலைப் பள்ளிகளை எம்.ஆர்.எப்.,பிளான்ட், நெக்ஸ்ட் எஜூகேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்பட்டன.இந்த ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா பி.எஸ்.,பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றி, ஆறு அரசு பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்புகளை துவக்கி வைத்து, பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிவு பெற்ற பள்ளிகளுக்கு அதற்கான சாவியை வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இணை அதிகாரி சிவகாமி, பி.எஸ்., பாளையம் பள்ளி துணை முதல்வர் சபாபதி, பல்வேறு பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.