அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி: மாணவர்கள் எதிர்பார்ப்பு
அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி: மாணவர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:10 AM
தேனி:
கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் உள்ள அறிவு சார் மையத்தில் அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுமா என தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.நகராட்சி நிர்வாகத்துறையால் தேனி புது பஸ் ஸ்டாண்டில் அறிவுசார் மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள், மாணவர்கள் படிப்பதற்கு தனித்தனி இருக்கை வசதிகளுடன் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு பாடப் பிரிவுகளில், பல்வேறு தலைப்புகளில் 2,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அறிவுசார் மையம் முழுவதும் கேமராவால் கண்காணிக்கப்படுகிறது. நுாலகத்திற்குள் அலைபேசியில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமைதியான சூழலில் படிப்பதற்கு உதகந்ததாக உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக எல்.இ.டி., ஸ்கிரீன், யு வடிவ மேஜை உள்ளிட்டவசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறையும் நுாலகத்தில் உள்ளது. இங்கிருந்து புத்தகங்கள் வெளியில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.இந்நுாலகம் வெள்ளிக்கிழமை, அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இயங்குகிறது.கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டு அருகில் அமைந்துள்ளால் பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, தேவாரம் பகுதிகளில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பலர் தினமும் அறிவுசார் மையத்திற்கு வந்து படிக்கின்றனர். மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட நுாலகம் ஆகியவை பஸ் ஸ்டாண்டில் இருந்து பல கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு வந்து படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வார இறுதி நாட்களில் போட்டித் தேர்விற்கு தயாராகுபவர்கள், மாணவர்கள், போட்டித்தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா கூறுகையில், அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.