அலுவலக பணிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார்
அலுவலக பணிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார்
UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:24 AM
கோவை:
இல்லம் தேடி கல்வி மைய பணிகளை கண்காணித்தல், தன்னார்வலர்களுக்கு ஊதியம் பெற்று தருதல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.கொரோனா சமயத்தில் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, மாநிலம் முழுக்க, 1.80 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு, மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாட சந்தேகங்களை,தன்னார்வலர்கள் விளக்குகின்றனர். இவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.இத்திட்டம் சரியாக செயல்படுவதை கண்காணித்தல், தன்னார்வலர்களுக்கு ஊதியம் பெற்று தருதல், பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள, ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், 385 ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக உள்ளனர். இவர்கள், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் இருந்து விடுவித்து, முழுநேர அலுவலக பணிகள், ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு பதிலி ஆசிரியர்களும் நியமிக்காததால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.ஆசிரியராவது வேண்டும்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், &'&' தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக, புதிய நியமனங்கள் இல்லை. ஓய்வு பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தற்போதைய சூழலை சமாளிக்க குறைந்தபட்சம், 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இச்சூழலில், இல்லம் தேடி கல்வி மைய கண்காணிப்பு பணிகளிலும், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. புதிய நியமனம் தாமதமாகும் பட்சத்தில், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை முன்வர வேண்டும்,&'&' என்றார்.