வேலை நிறுத்த முடிவை கைவிடுங்கள்; அரசு ஊழியர்களுக்கு அரசு வேண்டுகோள்
வேலை நிறுத்த முடிவை கைவிடுங்கள்; அரசு ஊழியர்களுக்கு அரசு வேண்டுகோள்
UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:34 AM
சென்னை:
நிதி நிலைமை சீரடைந்ததும், அரசுஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக,பரிசீலிக்கப்படும். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
தமிழகம் சந்தித்த இரண்டு இயற்கை பேரிடர்கள், எதிர்பாராத செலவினங்கள், இவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி எதுவும் பெறப்படாத நிலையில், ஜி.எஸ்.டி., இழப்பீட்டிற்காக, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை, ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் நிறுத்தம் போன்றவற்றால், மாநிலத்தின் நிதி பற்றாக்குறை சற்று அதிகமாகி உள்ளது.அரசு வருவாயை பெருக்கி, நிதி நிலைமையை சீர் செய்ய தேவையான நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிதி நிலைமை சீரடைந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.அரசின் பல்வேறு நலத்திட்டங்களை, அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும், அரும்பெரும் பணியை செய்து வரும் அரசு ஊழியர்கள், ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் அரசுஉணர்ந்தே இருக்கிறது.எனவே, இந்த சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள, வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட்டு, அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அமைச்சர்கள் பேச்சு!
சென்னை தலைமைச் செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உட்பட பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, மகேஷ் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, சங்க நிர்வாகிகள், தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அவற்றை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வதாக, அமைச்சர்கள் உறுதி தெரிவித்தனர்.பின், அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறியதாவது:
முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் அறிவிப்புக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் தொடரும்.குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோளை நிராகரிப்பதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று இரவு சென்னையில் நடந்தது. அதில், நிதிஅமைச்சர் அழைப்பு நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், முதல்வர் அழைத்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.