மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது
மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 10:29 AM
பவானி:
கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற விவகாரத்தில், ஈரோட்டை சேர்ந்த சிறுவன் உள்பட மூவரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர். மேலும், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கல்லுாரி மாணவர்களுக்கு, போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், போதை மாத்திரை பயன்படுத்திய ஒருவரை பிடித்து விசாரித்தனர். ஈரோட்டிலிருந்து அவர் வாங்குவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஈரோடு, கொங்காலம்மன் கோயில் கிழக்கு வீதியில், பேன்சி கடை நடத்தி வரும் பரத்குமார், 32; குஜராத்தை சேர்ந்த தினேஷ் என்பவரிடம், பார்சல் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, கருங்கல்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், 33, மூலம் விற்பனை செய்வதும் தெரிந்தது. இளைஞர் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாத்திரை, 200 ரூபாய் வீதம், 10 மாத்திரை கொண்ட அட்டை, 2,000 -ரூபாய்க்கும் விற்றுள்ளனர்.தினேஷ்குமார், பரத்குமார் ஆகியோரை கைது செய்து, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 16 வயது சிறுவனும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டான். இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 1,000 அட்டைகள் கொண்ட, 100 பெட்டி மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாயாகும். போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த தினேஷை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

