மாணவர்கள் மோதல்: 60 பேரை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை
மாணவர்கள் மோதல்: 60 பேரை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:35 AM
சென்னை:
சென்னையை அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட, இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்களை, டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி, நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மின்சார ரயில் சென்றது. அதில், ஏராளமான மாநில கல்லுாரி மாணவர்கள் பயணம் செய்தனர்.பட்டரவாக்கம் ரயில் நிலையம் சென்றபோது, அங்கு காத்திருந்தபச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், மாநிலகல்லுாரி மாணவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கினர். பதிலுக்கு, மாநில கல்லுாரி மாணவர்களும் தாக்குதல் நடத்தினர்.ரயில் நடைமேடையில் நடந்த இந்த மோதல் சம்பவம், பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக் கொண்டதால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.இந்த வன்முறை சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் கூறியதாவது:
பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரண்டு கல்லுாரி மாணவர்கள் கற்கள், பாட்டில்கள் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் ஈடுபட்ட சென்னை மாநில கல்லுாரி மற்றும் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 60 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரை அடையாளம் கண்டு, தேடி வருகிறோம். இதுதவிர, வீடியோவை வைத்து, மற்ற மாணவர்களையும் தேடி வருகிறோம். இந்த மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து, இரண்டு கல்லுாரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.சென்னை புறநகரில், 50க்கும் மேற்பட்ட பிரதான கல்லுாரிகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கல்லுாரி மாணவர்கள்அடிக்கடி மோதிக் கொள்வது நல்லதல்ல. பல முறை பிடித்துஎச்சரிக்கை விடுத்தும், அவர்கள் பொது இடங்களில் ஒழுங்கு முறைகளை பின்பற்றுவதில்லை. இனி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.