விவசாயிகள் போராட்டம்; மாணவருக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
விவசாயிகள் போராட்டம்; மாணவருக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:39 AM
புதுடில்லி:
தலைநகர் டில்லியில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், முன்கூட்டியே புறப்பட்டு, சரியான நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டில்லி நோக்கி &'டில்லி சலோ&' என்ற பேரணியை நேற்று முன் துவக்கினர்.இதையடுத்து, டில்லியின் எல்லைகள் மூடப்பட்டன. மேலும், டில்லியிலும் கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று துவங்குகின்றன.நாடு முழுதும் மட்டுமின்றி 26 வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். டில்லியில் மட்டும் 877 மையங்களில் 5.8 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. அனைத்து மாணவர்களும் காலை 10:00 மணிக்குள் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டும். டில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படலாம்.எனவே, மாணவர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்பட்டு தாமதம் இன்றி தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும். கூடுமானவரை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம். தாமதமாக வரும் மாணவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.