UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:29 AM
சென்னை:
சென்னை, பெரும்பாக்கம் கல்லுாரி சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 650 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், இப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.இதில், வருகைப்பதிவில் முதலிடம், சிறந்த மதிப்பெண் பெற்ற 18 மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை, பள்ளி நிர்வாகம் புகைப்படம் எடுத்துக் கொண்டது. பின், மாணவ - மாணவியரிடம் இருந்து கேடயங்களை வாங்கி பள்ளியில் வைத்தனர்.இதுகுறித்து கேட்ட போது, சான்றிதழ் மட்டும் தான் தர முடியும். கேடயத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல தர முடியாது&' என, தலைமையாசிரியர் கூறியுள்ளார். அப்போது, இந்த கேடயத்தை பொக்கிஷமாக வீட்டில் வைத்திருப்போம்; கொடுங்க என மாணவ - மாணவியர் கெஞ்சியுள்ளனர்.ஆனால் தலைமையாசிரியர், கேடயத்தை தர மறுத்துவிட்டார். இதனால் மாணவ - மாணவியர், ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பினர்.இதுகுறித்து மாணவ - மாணவியர் கூறியதாவது:
எங்களை கவுரவிக்க, அரசு நிதியில் வழங்கிய கேடயம் எங்களின் பொக்கிஷம். மேல் படிப்பு படித்து, வேலைக்குச் சென்று திருமணமானாலும், இந்த கேடயத்தை மறக்க மாட்டோம். கேடயம் 100 ரூபாய் தான் இருக்கும். அதை கூட தர மறுக்கின்றனர். அவற்றை எங்களிடமே ஒப்படைக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மாணவ - மாணவியரை கவுரவப்படுத்தி, அடுத்து வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கத்தான், அரசு சார்பில் கேடயம் வழங்குகிறோம். கொடுத்த கேடயத்தை திரும்பி பறித்தது குறித்து, எங்களுக்கு தெரியாது. பள்ளி நிர்வாகத்திடம் பேசி, சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரிடமே கேடயம் வழங்கப்படும் என்றனர்.