அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பு: கோவையில் 19ம் தேதி கண்காட்சி
அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பு: கோவையில் 19ம் தேதி கண்காட்சி
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:35 AM
கோவை:
கோவையில் அமெரிக்கா பல்கலைகள் பங்கேற்கும் உயர்கல்வி வாய்ப்பு சார்ந்த கல்வி கண்காட்சி நீலாம்பூர் பி.எஸ்.ஜி., ஐடெக்., கல்லுாரியில், பிப்., 19ம் தேதி நடக்கிறது.அமெரிக்க வர்த்தகத் துறை, சர்வதேச வர்த்தக நிர்வாக அமைப்பு, இந்தியாவில் உள்ள அமெரிக்க வணிக சேவை துறை, மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் துாதரகம் சார்பில், இலவச அமெரிக்க உயர்கல்வி கண்காட்சி கோவையில் நடைபெறவுள்ளது. மாலை, 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதில், அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி, பிரையன்ட் யுனிவர்சிட்டி, கத்தோலிக் யுனிவர்சிட்டி ஆப் அமெரிக்கா, சிட்டி யுனிவர்சிட்டி ஆப் சியாட்டில், கிளார்க்சன் யுனிவர்சிட்டி உள்ளிட்ட, 18 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.இதுகுறித்து, சென்னை அமெரிக்க துணைத்துாதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ் கூறுகையில், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களின் தரம், பன்முகத்தன்மை, உலகளவில் சர்வதேச மாணவர்களின் தேர்வாக அமெரிக்கா உள்ளது. கோவையில் நடக்கும் உயர்கல்வி கண்காட்சியில் அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கவிரும்பும் அனைவரும் பங்கேற்கலாம். பல முன்னணி அமெரிக்க பல்கலைகள் இதில் பங்கேற்கவுள்ளனர் என்றார்.மாணவர்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள முகவரியான @EdUSA_India என்பதில் முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளலாம். முதுகலை, முனைவர் படிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். இதில், 18 அமெரிக்கா உயர்கல்வி பிரதிநிதிகள், கல்வி ஆலோசகர்கள், சென்னை அமெரிக்க துணைத்துாதரக அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கும் அதிகாரிகள், ஆலோசகர்கள் பதில் அளிப்பார்கள்.கண்காட்சியில் பங்கேற்க, முன்பதிவு கட்டாயம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு https://www.usief.org.in/Study-in-the-US.aspx என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.