சிறுநீரில் இருந்து மின்சாரம், உரம் உற்பத்தி; ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு சாதனை
சிறுநீரில் இருந்து மின்சாரம், உரம் உற்பத்தி; ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு சாதனை
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 10:05 AM
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகே உள்ளது ஐ.ஐ.டி., வளாகம். இங்கு, சிவில் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் பிரவீணாவின் தலைமையிலான திட்ட விஞ்ஞானி ஸ்ரீஜித், உதவி விஞ்ஞானி ரினு அன்னா, ஆராய்ச்சி மாணவர் சங்கீதா ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சி குழுவினர், சிறுநீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை சாத்தியமாக்கியுள்ளனர்.இதுகுறித்து உதவிப் பேராசிரியர் பிரவீணா கூறியதாவது:
ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான, உலகளாவிய முயற்சிகளுக்கு மத்தியில், நிலையான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியில் உருவாக்கியுள்ளோம். மக்னீசியம் ஏர் ப்யூயல் செல் பயன்படுத்தி, அணு மூலங்கள் பிரிக்கப்பட்ட சிறுநீரின் வினையூக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.இந்தத் தொழில்நுட்பம் வாயிலாக, சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் கரிம உரங்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யலாம். ஒவ்வொரு, 48 மணி நேரத்திற்கும், 5 லிட்டர் சிறுநீரில் இருந்து, 500 மில்லிவாட் (டெசிபல் - மில்லிவாட்) மின்சாரம், 7-12 மின்னழுத்தம் மற்றும் 10 கிராம் உரம் ஆகியவற்றை உருவாக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மின்சாரத்தை பயன்படுத்தி, எல்.இ.டி., விளக்குகளை எரியவைக்கவும், மொபைல்போன்களை சார்ஜ் செய்யவும் முடியும். சிறுநீரின் அயனி வலிமை மற்றும் மின் வேதியியல் எதிர்வினை வாயிலாக, மின்சாரமும், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்து கூறுகளால் கரிம உரமும் உற்பத்தி செய்ய முடியும்.நீர்த்த (பழைய) சிறுநீரில் இருந்து மட்டுமே இந்த உற்பத்தி சாத்தியமாகும். மனித சிறுநீரில் இருந்தும், பசுவின் சிறுநீரில் இருந்தும் இதை உற்பத்தி செய்யலாம் என கண்டறிந்து உள்ளோம்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, அறிவியல் சமபங்கு அதிகாரமளிக்கும் (science for equity empowerment) பிரிவு இந்தத் திட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியுதவியை வழங்கியது.தற்போது, டெக்னாலஜி ரெடினெஸ் லெவல் 4ல் (டி.ஆர்.எல்), சாத்தியமான தொழில்நுட்பமாக பரிந்துரைத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.