UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 10:06 PM
தட்சிண கன்னடா:
மங்களூரு நகரில் உள்ள ஜெரோசா பள்ளியின் பெண் ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட பொறுப்பு வகிக்கும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.இது தொடர்பாக மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மங்களூரு நகரில் உள்ள ஜெரோசா பள்ளியின் பெண் ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, கலபுரகி பள்ளி கல்வித் துறை கமிஷனர், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியை, பாடம் நடத்தும்போது ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, எம்.எல்.ஏ.,க்கள், குழந்தைகளை தெருவில் நிறுத்தி -போராட்டம் நடத்தினர்.இது, இம்மாவட்டத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ.,வினர் கூறியவுடன் வழக்கை வாபஸ் பெற முடியாது. விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், போலீசார் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.