UPDATED : பிப் 19, 2024 12:00 AM
ADDED : பிப் 19, 2024 07:49 PM
ஊட்டி:
கொடைக்கானலை தொடர்ந்து, ஊட்டியிலும் போதை காளான் புழக்கம் உள்ளதால் பள்ளி மாணவர்கள்; இளைஞர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த, 20, வயது பொறியியல் கல்லுாரி மாணவரும், 19 வயது நர்சிங் கல்லுாரி மாணவியும், பள்ளி கால நண்பர்களாக இருந்து, பின், காதலித்து வந்துள்ளனர். நாளடைவில் தனிமையில் சந்தித்து வந்த அவர்கள், மது பழக்கத்திற்கு அடிமையாகினர்.கடந்த வாரம், மாணவியை தனது வீட்டுக்கு வாலிபர் அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து போதை காளானை உட்கொண்டுள்ளனர். அதில், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த சிவப்பு நிற போதை காளான் (அமனிட்டா மஸ்கரியா), மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், ஊட்டியில் மது அருந்தி இறந்த பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், முதன் முதலாக மதுவுடன்;போதை காளானை உட்கொண்டு இறந்த மாணவியின் மரணம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வகை காளான்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும், கொடைக்கானல் போன்ற சுற்றுலா மையங்களில் அதிகளவில் விற்பனை செய்வதாக தகவல் உள்ளன. அங்கு போதை காளான் பயன்படுத்திய பலரையும்; அதனை விற்பனை செய்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. ஊட்டியில் இதுவரை, அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துகள்; புகையிலை; கஞ்சா போன்றவற்றை பிடித்து, பலரை கைது செய்துள்ளோம்.இந்நிலையில், முதன் முதலாக போதை காளான் இங்கும் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வேறு யாராவது பயன்படுத்தி வருகிறார்களா என்பது குறித்தும்; விற்பனையில் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.போதை தருமா அமனிட்டா மஸ்கரியா?
தாவரவியல் ஆய்வாளர் டாக்டர் ராஜன் கூறியதாவது:
ஊட்டியில் போலீசார் கைப்பற்றிய காளான், அமனிட்டா மஸ்கரியா என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட பூஞ்சை காளான் வகையை சார்ந்த இவை, நம் மாநிலத்தில் கொடைக்கானல், ஊட்டியில் உள்ள பைன் வனப்பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. ஜூன், ஜூலை பருவ மழைக்கு பின், ஆக., செப்., மாதம் வரை இந்த காளான் பைன் வனப்பகுதிகளில் காணப்படும்.இதனை சிலர் பறித்து காயவைத்து, கஞ்சா விற்பனை செய்வது போல, போதை காளான் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர். இதில், உள்ள மஸ்காரின் என்ற வேதிபொருள், மிகவும் ஆபத்தானது. இதனை அதிகளவில் உட்கொண்டால் நரப்பு தளர்ச்சி ஏற்படும். ஐந்து மணி நேரத்தில் மரணம் ஏற்படும். இதனை உட் கொண்டால், மது போன்ற போதை ஏற்படாது. மூளை மந்தமான செயல்பாட்டில் இருக்கும். இது போதை போன்று உணரப்படும். இந்த விஷ காளானை யாரும் உட்கொள்ள கூடாது. இவ்வாறு ராஜன் கூறினார்.