பொதுத்தேர்வு ஏற்பாடு தீவிரம் தயாராகும் 4,035 மையங்கள்
பொதுத்தேர்வு ஏற்பாடு தீவிரம் தயாராகும் 4,035 மையங்கள்
UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 09:56 AM
பெங்களூரு:
இந்தாண்டு, 1,288 மையங்களில் நடக்கும் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வுக்கு 6,98,624 மாணவர்களும்; 2,747 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு 8,96,171 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.கர்நாடகாவில், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, பள்ளிகல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் மது பங்காரப்பா, பெங்களூரு விகாஸ் சவுதாவில், நேற்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.இதில், அவர் பேசியதாவது:
இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு, மார்ச் 1 முதல், 22ம் தேதி வரையிலும்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, மார்ச் 25 முதல், ஏப்ரல் 4ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும்; படித்தவர்களின் விகிதத்தை உயர்த்தும் வகையிலும், மாநிலத்தில் முதல் முறையாக இரண்டு வகுப்புகளுக்கும் மூன்று முறை தேர்வு நடத்தப்படும்.அதுவும், ஏப்ரல், மே மாதங்களில் இரண்டாவது தேர்வும்; அதற்கடுத்து மூன்றாம் தேர்வும் நடத்தப்படும். மாணவர்கள் யாருமே உயர்கல்வி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட கூடாது என்பது அரசின் நோக்கம். எனவே தேர்ச்சி பெறாதவர்கள், உடனடியாக அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இந்தாண்டு, 1,288 மையங்களில் நடக்கின்ற இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வுக்கு, 6,98,624 மாணவர்களும்; 2,747 மையங்களில் நடக்கின்ற எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு, 8,96,171 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில், குறைந்த மதிப்பெண் கிடைத்தால், அந்த ஒரு பாடத்துக்கு மட்டும் மீண்டும் தேர்வு எழுதலாம்.தங்கள் மதிப்பெண் சான்றிதழை, டிஜிட்டல் முறையில், டிஜிலாக்கர் செயலி மூலம் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். மாணவர்கள் அச்சமின்றி தைரியத்துடன் தேர்வு எழுத வேண்டும். முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிவது குறித்து, அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.