கல்வியில் சிறுபான்மை, பெரும்பான்மை வேண்டாமே: தனியார் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள்
கல்வியில் சிறுபான்மை, பெரும்பான்மை வேண்டாமே: தனியார் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள்
UPDATED : பிப் 22, 2024 12:00 AM
ADDED : பிப் 22, 2024 08:37 AM
திண்டுக்கல்:
கல்வி நிலையங்களில் சிறுபான்மை, பெரும்பான்மை என பார்க்கமல் அனைவருக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டுமென தனியார் பள்ளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ,சி.பி. எஸ். சி தனியார் பள்ளிகள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி ,செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிரந்தர அங்கிகாரம் வழங்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். பள்ளி அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டு வந்தது.தி.மு.க..,ஆட்சி வந்தவுடன் தனியார் பள்ளிகளுக்கென தனி இயக்குனரை அமைத்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை அவர்தான் வழங்கவேண்டும் என ஆணை பிறப்பித்தது.பல வகையான சான்றிதழ்கள் பெற்று கருத்துருக்களை இயக்குனர் அலுவலகத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை சில பள்ளிகளுக்கு மட்டுமே ஆணை வழங்கபட்டுள்ளது.பல பள்ளிகளின் கோப்புகள் ஆண்டு கணக்கில் கேட்பாரற்று முடங்கி கிடக்கின்றன. கொரோனா பாதிப்பினால் 500 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.நிறைய பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகள் பல போதுமான மாணவர் சேர்க்கை இல்லாமல் தடுமாறிக் கொண்டுள்ளன . எந்த வித அரசு உதவி இல்லாமல் தனியாரால் பல சிரமங்களுக்கிடையில் நடத்தப் படும் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தற்காலிக அங்கிகாராத்தை நிரந்தர அங்கீகாரமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மாநில சங்கங்கள் பல முறை அரசிடம் கோரி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் நிரந்தர அங்கீகாரம் வழங்கபடும் என தெரித்திருக்கிறது.கல்வி நிலையங்களில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பார்க்காமல் அனைவருக்கும் சமநீதி என்ற கொள்கையில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றனர்.