UPDATED : பிப் 22, 2024 12:00 AM
ADDED : பிப் 22, 2024 05:31 PM
இளையான்குடி:
இளையான்குடியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கோரிய மனுதாரருக்கு மனுதாரரின் கையெழுத்தை போலியாக இட்டு ஆணையத்திற்கு அனுப்பிய விவகாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் ஊருணி, கண்மாய் ஆகியவற்றில் துார் வாருவதற்கு பின்பற்றப்படும் வழிமுறைகள், அரசாணைகள் குறித்து விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேரூராட்சிகள் மட்டும் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தன. இளையான்குடி பேரூராட்சி சார்பில் பதில் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் இருந்து ஏற்கனவே ராதாகிருஷ்ணன் கையொப்பமிட்டு தகவலை பெற்றுக் கொண்டதற்கான கடிதத்தை அனுப்பினர். ராதாகிருஷ்ணன் கடிதத்தில் இருந்த கையெழுத்து தன்னுடையது இல்லை எனவும், தனது கையெழுத்தை இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் போலியாக இட்டு ஆணையத்திற்கு அனுப்பியதாகவும் இளையான்குடி போலீசிலும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தார்.இதுதொடர்பாக போலீசார் நேற்று செயல் அலுவலர் கோபிநாத் மீது வழக்கு பதிவு செய்தனர்.