இளநிலை க்யூட் நுழைவுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை மாற்றம்
இளநிலை க்யூட் நுழைவுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை மாற்றம்
UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 09:15 AM
கணினி வழி மதிப்பீடு
நாட்டில் உள்ள மத்திய பல்கலைகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, க்யூட் எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வை நடப்பு ஆண்டு முதல், கணினி தேர்வு மற்றும் ஓ.எம்.ஆர்., எனப்படும், கணினி வழி மதிப்பீடு விடைத்தாள் முறை வாயிலாகவும் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துஉள்ளது.இதன் வாயிலாக, தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்படும். மாணவர்கள் தேர்வெழுத நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய நிலை மாறி, வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தேர்வு மையங்களை தேர்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்.அதிகமான தேர்வர்கள் பதிவு செய்யும் பாடங்களுக்கு ஓ.எம்.ஆர்., முறையிலும், குறைவான பதிவுகளுக்கு கணினி முறையிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.தற்போது ஒரு பாடத்துக்கான சில தேர்வுகள் மூன்று - நான்கு நாட்கள் வரை நடக்கின்றன. இனி, ஒரு பாடத்துக்கான தேர்வு ஒரே நாளில், ஒரே நேரத்தில் முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல், 10 பாடங்களுக்கு பதிலாக தேர்வர்கள் அதிகபட்சமாக ஆறு பாடங்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர். கடந்த ஆண்டு, 10 பாடங்கள் எழுத அதிக தேர்வர்கள் ஆர்வம் காட்டாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கோரிக்கை
இது குறித்து, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
இளங்கலை பட்டப்படிப்புக்கான, க்யூட் நுழைவுத் தேர்வில், சில பாடங்களுக்கான தேர்வுகள், இரண்டு அல்லது மூன்று நாட்கள் பல்வேறு அமர்வுகளில் நடத்தப்படுகின்றன. அப்போது, ஒவ்வொரு அமர்வுக்கும் வேறு வேறு வினாத் தாள்கள் வழங்கப்படுகின்றன.அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, நார்மலைசேஷன் ஆப் ஸ்கோர் என்ற அடிப்படையில், குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண் மற்றும் அதிகபட்ச மதிப்பெண்களை கணக்கிட்டு, அதற்கான பிரத்யேக கணித சூத்திரத்தை பயன்படுத்தி மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த நார்மலைசேஷன் மதிப்பெண் முறையயை நீக்க கோரி, தேர்வர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனி, ஒரு பாடத்துக்கான தேர்வை ஒரே அமர்வில் நடத்தும் போது, இந்த சிக்கலான மதிப்பெண் கணக்கிடும் முறையும் களையப்படும். இவ்வாறு அவர் கூறினார்.