ஐ.டி., துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகும்: முதல்வர் நம்பிக்கை
ஐ.டி., துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகும்: முதல்வர் நம்பிக்கை
UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:06 AM
சென்னை:
தகவல் தொழில்நுட்ப துறையில், தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு, இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவில் முதன் முதலாக, 1997ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கை, அதற்கு தனித்துறை, &'தமிழ்நெட் - 99&' என, ஐ.டி., துறையில் தமிழின் பாய்ச்சல், கருணாநிதி காலத்தில் தான் துவங்கியது.தமிழ்நாடு தரவு மைய கொள்கை - 2021, தமிழகத்திற்கான தரவுக் கொள்கை - 2022, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தர நிலை கொள்கை - 2022, தகவல் தொடர்பு உட்கட்டமைப்பிற்கான கொள்கை - 2022 என, முக்கியமான தகவல் தொழில்நுட்ப கொள்கை முடிவுகளை, அறிக்கைகளை அரசு வெளியிட்டுஇருக்கிறது.இரு கனவுகள்
தனியார் கூட்டு முறையில், தகவல் தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க, தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, 5ஜி அலைக்கற்றை அமைப்பதை துரிதப்படுத்தினோம். தமிழகத்தில் இந்த துறைகளில், வர்த்தகம் துவக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம்.எனக்கு இரண்டு கனவுகள் உள்ளன. ஒன்று தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். மற்றொன்று உலகத்தின் மனிதவள தலைநகரமாக, தமிழகத்தை மாற்ற வேண்டும். அதற்கான முழு ஈடுபாட்டுடன், என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.டிஜிட்டல் மயம்
ஐ.டி., துறையுடன், வளர்ச்சியும், முன்னேற்றமும், இப்போது நம் கண் முன்னால் தெரிகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில், கணித்தமிழ் - 24 மாநாட்டை நடத்தி இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு காலத்தில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில், ஒரு தொழில்நுட்ப மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்.தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தை அறிமுகப்படுத்தியது, கடந்த ஆண்டு சாதனைகளில் முக்கியமானது, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக, 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள, 38,292 &'இ - சேவை&' மையங்களில், 25,762 மையங்கள், கடந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை நிச்சயம் ஐ.டி., துறையை வளர்க்கும்.முதன்மை மாநிலம்
இந்த துறையில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையினர் தேடி வரும் நகரமாக ஆக்குவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகின்றனவோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் தமிழகத்தில் உருவாக உழைப்போம்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.மாநாட்டில், அமைச்சர்கள் அன்பரசன், தியாகராஜன், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலர் தீரஜ்குமார், எல்காட் இயக்குனர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல்வர் துவக்கிவைப்பு
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட, அனைத்து மாநகராட்சிகளிலும், 1,000 முக்கிய இடங்களில், இலவச வை - பை சேவைகள் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக, சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, பூங்காக்கள், பஸ் நிலையங்கள், கடற்கரை என, 500 இடங்களில், எல்காட் நிறுவனம் சார்பில், இலவச வை - பை வசதி வழங்கும் திட்டத்தை, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், முதல்வர் துவக்கி வைத்தார்.