ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் யார் தெரியுமா?
ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் யார் தெரியுமா?
UPDATED : பிப் 27, 2024 12:00 AM
ADDED : பிப் 27, 2024 05:00 PM
திருவனந்தபுரம்:
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர்.இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து, விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து கவுரவித்தார். இதன்படி விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோரை நேரில் அறிமுகம் செய்து வைத்து பிரதமர் கவுரவித்தார். அவர்களுக்கு அடையாள பட்டையையும் வழங்கினார்.நான்கு சக்திகள்
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
விண்வெளி வீரர்களுக்கு அனைவரும் கைதட்டி உற்சாகம் அளிக்க வேண்டும். (அப்போது மோடியும், அங்கிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் கை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்). விண்வெளி செல்லும் வீரர்களை நாடு பார்த்து விட்டது.அவர்கள் வெறும் 4 மனிதர்கள் அல்ல. அவர்கள், 140 கோடி இந்தியர்களின் எண்ணங்களை விண்வெளிக்கு எடுத்து செல்லும் நான்கு சக்திகள். 40 ஆண்டுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளி செல்கிறார். இந்த முறை, நேரம், கவுண்ட் டவுன், ராக்கெட் என அனைத்தும் நம்முடையது. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அப்படி ஒரு தருணம்.2035ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு என சொந்தமான விண்வெளி நிலையம் இருக்கும். இது விண்வெளியின் அறியப்படாத விரிவாக்கங்களைப் படிக்க உதவும். அமிர்த கால கட்டத்தில், இந்திய விண்வெளி வீரர் நமது சொந்த ராக்கெட்டில், நிலவின் தரையில் இறங்குவார். இவ்வாறு மோடி பேசினார்.