UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 09:21 AM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., ஆய்வகங்களை, வரும், 2, 3ம் தேதிகளில் பொது மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.ஐ.டி.,யின் ஆய்வகங்களை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 2, 3ம் தேதிகளில், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், எக்ஸ்போ நடக்கிறது. ஐ.ஐ.டி., மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையம் தொடர்பான திறந்த வெளி அரங்கு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட விரும்புவோர், நாளைக்குள் http://shaastra.org/register என்ற இணையதளத்தில், முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சிகளை பார்க்க வரும் பொதுமக்களுக்கு, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள ஆய்வக சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரோபாடிக்ஸ், உயிரி மருத்துவ இன்ஜினியரிங், ராக்கெட் மற்றும் ஏவுகணை தயாரிப்பு ஆகியவை தொடர்பான ஆய்வகங்களை பொதுமக்கள் பார்க்கலாம். மேலும், மின்சார வாகன வேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.வருங்கால மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில்துறை வல்லுனர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பயன்படும். மாணவர்களின் திறந்தவெளி அரங்கில், மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.