UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:12 AM
சென்னை:
சென்னையில் 5.53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நாடு முழுதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் அதற்கான முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் 77.76 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில், 5 வயதுக்கு உட்பட்ட 5.53 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு மார்ச் 3ம் தேதி, 115 பேருந்து நிலையங்கள், 46 நடமாடும் மையங்கள் உட்பட 1,646 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படும்.இதற்காக, 7,000 பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். இந்த முகாம் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

